'உன்னால் எதுவும் முடியாது' எனச் சொல்பவனை நோக்கி...

வாழ்வில் சில சாதனைகளைப் பார்த்துப் பிரமித்துப் போயிருப்பீர்கள். வியந்து போய் " இதைச் செய்ய என்னால் முடியாதப்பா" என உங்களையே நீங்கள் சொல்லிக் கொண்டிருக்கவும், "உன்னால் முடியுமா" எனக் கூட நின்று பார்த்துக் கொண்டிருப்பவர்களிடம் கேட்டிருக்கவும் கூடும்.

வாழ்க்கை என்பது பல சாதனைகளால் ஆனது. இதை நீங்கள் வாசிக்கும் இதே கணத்தில் உலகில் கருவிகளின் துணையோடு சுவாசித்துக் கொண்டிருக்கும் பல உயிர்களுக்கு மத்தியில், நீங்கள் உங்களையறியாமலேயே வெகு இயல்பாகச் சுவாசித்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் இரத்த ஓட்டம் சீராக ஓடிக் கொண்டிருக்கிறது. இமைகள் துடிக்கின்றன. எத்தனையோ உயிர்கள் ஊசலாடும் இக் கணத்தில் நீங்கள் இயல்பாக வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள். இதுவும் சாதனைதானே?

ஆனால் இத்தோடு நின்று விடல் அல்லது தேங்கி விடல் போதுமானதா? பிறந்தோம், பிறந்ததற்காக வாழ்ந்தோம், வாழ்ந்ததனால் இறந்தோம் என எம்மைப் பற்றிய எந்தத் தடயத்தையும் இவ்வுலகுக்கு விட்டுப் போகாமல், மறைந்து விடுதல் ஏற்புடையதா? ஏற்புடையதென்றால் மனிதனுக்கும், ஐந்தறிவு ஜீவராசிகளுக்கும் என்ன வேறுபாடு?

சிலருக்கு இயல்பாகவே தன்னால் எதுவும் முடியாது எனும் தாழ்வு மனப்பான்மை இருக்கக் கூடும். இன்னும் சிலருக்குத் தன்னம்பிக்கை இருக்கும். ஆனால் கூட இருப்பவர்கள் அச்சுருத்தி, தாழ்வு மனப்பான்மைக்கு உட்படுத்தக் கூடும். எது எவ்வாறாயினும், எதையாவது சாதிக்கவேண்டுமென்ற மனப்பான்மைக்கு தாழ்வு மனப்பான்மைதான் மிகப்பெரிய தடைக்கல்.

இனி சில படங்களைப் பார்ப்போம்.

 
நீங்கள் சாதிக்க எண்ணியிருப்பது குறித்து நன்கு ஆராய்ந்து பாருங்கள்.

அதற்கான எல்லா வழிகளையும் தேடிப் பாருங்கள். எதில் உங்கள் காலமும், சக்தி விரயமும் குறைவாக உள்ளதோ அவ் வழியைத் தேர்ந்தெடுங்கள்.

அந்தப் பாதையில் எந்தத் தயக்கமுமின்றி முதல் அடி எடுத்து வையுங்கள்.

உங்களுக்கென இருக்கும் அனைத்து திறமைகளையும் இப் பாதையில் முன்னேற பயன்படுத்தலாம் நீங்கள்.

நேர்மையோடும், சுறுசுறுப்பாகவும், 'என்னால் முடியும்' என்ற தன்னம்பிக்கையோடும் செயற்படுங்கள்.

வெற்றியின் இலக்கை எட்டும் வரை சோர்வடையாதீர்கள். 

உங்கள் மனதிற்கு உண்மையாகவும், மூளைக்கும் உடலுக்கும் சுறுசுறுப்பாகவும், நம்பிக்கையோடு நீங்கள் செயலாற்றினால்  போதும். நீங்கள் சாதிக்க விரும்புவது எளிதில் உங்களை எட்டிவிடும். 
சாதிக்க வேண்டுமென்ற உணர்வு உங்களுக்குள் தோன்றி விட்டாலே போதும்.
வாழ்வின் கணங்கள் ஒவ்வொன்றும் பயனுள்ளதாகும். வீணாகக் கழியும் ஒவ்வொரு வினாடியையும் பிரயோசனப்படுத்த நீங்களே முனைவீர்கள். உங்கள் சாதனையை நேசியுங்கள்.
"உன்னால் எதுவும் செய்யமுடியாது" என உங்களை நோக்கிச் சொல்பவனிடம் தன்னம்பிக்கையோடு சொல்லுங்கள் இனி
"எவனோ ஒருவனால் செய்யமுடியும்போது என்னால் முடியாதா என்ன? "

ஒரு தாய்மைப் போராட்டம் - 2

ஒரு இளங்காலை வேளை. குதூகலமாக இரை தேடி, தாழப் பறந்த குருவியொன்று காரில் அடிபட்டுக் கீழே விழுந்தது. அது என்ன சக மனிதனா, இடித்தவர் இறங்கி வந்து காப்பாற்ற அல்லது உதவ ? (இக் காலத்தில் மனிதனுக்கும் இதே நிலைதான் என்பது வேறு விடயம்)


விழுந்த குருவியால் எழுந்து பறக்க முடியவில்லை. வீழ்ந்து தவிப்பதை சக குருவியொன்று  கண்டது. அருகில் வந்து பார்த்தது. ஏந்திப் பறக்கும் எண்ணம் உதித்திருக்குமெனினும் அதனால் முடியவில்லை. செய்வதறியாது துடித்த ஜீவனைத் தனியே விட்டு குருவி பறந்தது. இரையெடுத்து வந்து, தன் அன்பையும் நேசத்தையும் அரவணைப்பையும் ஒன்றாகக் கலந்து மருந்தெனக் குருவிக்கு ஊட்டியது.


மீண்டும் இரையெடுத்து வந்து பார்த்தபொழுதில் உயிரெனக் கலந்தது விட்டுப் போயிருந்தது. அதை உணராச் சக குருவி, கண்ணீர் தளும்பா விழிகளைக் கொண்ட ஒற்றைக் குருவி தனக்குள் அழுதது. தன் சிறு கால்களால் தட்டித் தட்டி எழுப்பியது. குருவி எழவில்லை.


சலனமற்ற குருவியை விட்டும் பறந்து போன உயிருக்குக் கூடக் கேட்கும் வண்ணம் சக குருவி அழைத்தது, அழுதது, அலறியது, மன்றாடியது. எதையும் அறியாச் சடலம் காற்றுக்கு மட்டும் சிறு இறகசைத்தபடி வீதியிலே கிடந்தது.



ஆசையாசையாய்ச் சேமித்த வாழ்வின் கனவுகள் நடுவீதியில் கலைந்துபோயிற்று. இரை தேடிப் பறக்கும் எண்ணமின்றி, தன் கூட்டத்தைத் தேடியலையும் எண்ணமின்றி தனது எந்த ஆர்ப்பரிப்புக்கும் இறுதி வரை எழாக் குருவியின் அருகிலேயே  உயிர்க்குருவி மௌனித்து அமர்ந்தது...


இது ஒரு குருவிக்கு நிகழ்ந்தது. இதற்கே உள்ளம் பதைத்துப் போயிருப்பீர்கள். விழி கசிந்திருப்பீர்கள். இது போலத்தானே நமது சக மனிதர்களும்.

ஒவ்வொரு மனிதனுக்கும் உங்களுக்குப் போன்றே, பெற்றெடுத்து, அன்பு செலுத்தி வளர்த்த தாயொருத்தி இருப்பாள். ஒவ்வொரு மனிதனுக்கும் உங்களுக்குப் போன்றே ஒரு வாழ்க்கை இருக்கிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் உங்களுக்குப் போன்றே அவ் வாழ்க்கையில் எப்படியெல்லாம் வாழவேண்டுமென்ற ஆசைகளும் கனவுகளும் இருக்கின்றன. ஒவ்வொரு மனிதனுக்கும் உங்களுக்குப் போன்றே வாழும் உரிமையும் இருக்கின்றது.

ஆனால், நாம் என்ன செய்கிறோம்? சக மனிதனைத் துன்புறுத்துகிறோம். நமது உடலுறுப்புக்களால், நடவடிக்கைகளால், வார்த்தைச் சாட்டைகளால்... இன்னுமின்னும்... வதைக்கிறோம்.

அக் கணத்தில் அவனது தாய், மனைவி/ கணவன், சகோதர,சகோதரிகள், நண்பர்கள் இன்னும் அவனது பிரியத்துக்குரியவர்கள் அதனைப் பார்த்திருப்பார்களானால் எவ்வளவு துயருருவார்கள் என எண்ணிப் பார்க்கிறோமா?

அவனது வாழும் உரிமையைச் சிதைத்து, அவனது கனவுகள், ஆசைகள் எல்லாவற்றையும் அழித்து அதில் சந்தோஷமடைய எப்படி முடிகிறது நம்மால்? அவனது கண்ணீர்த் துளிகளை அள்ளியெடுத்து, அதை மகிழ்ச்சியெனப் பூசிக்கொள்ள எப்படி இயலுமாக இருக்கிறது நம்மால்?

உயிரற்றுப் போன சக குருவிக்காக வருத்தப்பட யார் கற்றுக் கொடுத்தது அந்தக் குருவிக்கு?

ஆனால் எல்லாவற்றையும் கற்றுக்கொண்ட நாம், ஆறறிவெனச் சொல்லிக் கொள்ளும் நாம்... இருக்கிறோம்.
சக மனிதன் உயிர் போனாலும், அவனுக்கு எத்தகைய இடர் வந்தாலும் சிறிதும் பதறாதபடி..சிறிதும் வாடாதபடி..அவன் நிலையை மாற்றச் சிறிதும் சிந்திக்காதபடி..நாம் எல்லாவற்றையும் வெறுமனே பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

இனியாவது என்ன செய்யப் போகிறோம்...சிந்திப்போமா ?

ஒரு தாய்மைப் போராட்டம் - 1

தாய்மையின் அன்பு சார்ந்த உணர்வுகள் குறித்து எல்லோரும் அறிந்திருப்பீர்கள். நான் பெரிதாக விவரிக்க எதுவும் இல்லை. எனினும்...

நமக்குள்ளே யாரேனுமொருவருக்கு ஏதேனுமொரு துன்பமென்றால் கண்டுகொள்ளாது போய்விடுகிறோம். இங்கு ஐந்தறிவு ஜீவன்களென்று நாம் பொதுவாக ஒதுக்கிவைத்திருக்கும் இவற்றைப் பாருங்கள்.

உயிர்களைக் கொன்று , தோலை உரித்தெடுத்து...

இந்தப் படங்கள் உங்களுக்கு அதிர்ச்சியையும், அருவருப்பையும் ஒரு சேர அளிக்கக்கூடியன. இதன் ஆரம்ப நிலை உங்களை முகம்சுழிக்க வைப்பதாக இருப்பினும் கூட , இறுதி நிலையில் நீங்கள் கூட பெரு விருப்பத்துடன் உங்களோடு சேர்த்தணைத்துக் கொள்ளும் ஒன்றாக இவை இருக்கக் கூடும். இனி படங்களைச் சற்றுப் பார்ப்போம்.

 
பாம்புகள், முதலைக் குட்டிகள் இதற்கென்றே பிடித்துவரப்பட்டுக் கொல்லப்படுகின்றன
 
மிகவும் கவனமாகத் தோல் உரித்து வேறாக்கப்படுகிறது

அப்பாவி ஜீவன்களென பாம்பு, முதலை போன்றவற்றைச் சொல்ல முடியாதுதான். எனினும் இப் பூமியில் வாழும் உரிமை நமக்கிருப்பதைப் போலவே அவற்றுக்கும் இருக்கிறதுதானே ?
மனிதனின் அற்பமான பேராசைகளுக்கும், அந்தஸ்துக்காக வேண்டியும் இவை போலப் பல உயிர்கள் தினந்தோறும் நாம் அறிந்த விதத்திலும், அறியாப்பக்கங்களிலும் பலியாகிக் கொண்டே இருக்கின்றன.
 
இவ் உயிர்களின் தோல்களால் உருப்பெறும் செருப்புக்கள், தோற்பைகள், கைப்பைகள், தோலாடைகள், தோல் பொருட்கள் எனப் பலவற்றுக்கு புராதன காலம்தொட்டு இன்றைய நவீன காலம்வரை சமூகத்தில் பாரிய வரவேற்பு இருந்துகொண்டே இருக்கின்றது. 
இவ்வாறாகத் தங்கள் உயிர் கொடுத்து, உங்கள் அந்தஸ்த்தை உயர்த்தும் பொருட்களை இனி நீங்கள் பாவனைக்கென எடுக்கும் போதெல்லாம் ஒரு உயிரின் கதறல் உங்கள் காதுகளில் கேட்கட்டும் !

குழந்தைகள் மனதில் வன்முறையை விதைக்க...

இப் படத்திலிருப்பது என்ன? நன்றாகக் கூர்ந்து கவனித்துப் பதில் சொல்லுங்கள். நீங்களும் கூட உங்கள் குழந்தைக்கு இப்படிச் செய்யக் கற்றுக்கொடுக்கக் கூடும்.

நாம் வாழும் சமுதாயத்தில் இன்று நிறைய வன்முறைகளையும், அனாச்சாரங்களையும் தொடர்ந்தும் காண்கிறோம். ஒரு தனி நபராலோ, பலராலோ இழைக்கப்படும் வன்முறைகள் கணப்பொழுதில் தோன்றுபவையா? இல்லை. அவ் வன்முறைகளுக்குக் காரணமான நபர்களின் பால்யத்திலிருந்து அவர்களது மனதில் விதைக்கப்பட்டவைதான் பெருவிருட்சங்களாகி வன்முறைகளைப் பூக்கின்றன.

குழந்தைகளின் இதயங்கள் எதுவுமே எழுதப்படாத வெள்ளைக் காகிதத்தை ஒத்தவை. அதில் வரையப்படும் அழகான எண்ண ஓவியங்கள், துயரக் கீறல்கள் எல்லாமே தான் அவற்றின் முழு வாழ்க்கையையும் தீர்மானிக்கின்றன.

குழந்தைகளுக்கு விளையாட்டுப்பொருட்களெனவும் உபயோகப்பொருட்களெனவும் பல பொருட்கள் சந்தையில் இன்று மலிந்துகிடக்கின்றன. இது பென்சில் சீவும் கருவி. குழந்தை கேட்கிறதே எனவும் வித்தியாசமாக இருக்கிறதெனவும் நீங்கள் அதன் உபயோகத்திற்கு இது போன்றவற்றை வாங்கிக் கொடுக்கக் கூடும். ஆனால் இதனை உபயோகிக்கும் அதன் மனதில் சக குழந்தையிடம், இன்னொரு உயிரிடம் பரிசீலித்துப் பார்க்கும் எண்ணம் தோன்றக் கூடும் அல்லவா? அதுவே வன்முறை. வாய்ப்புக்கள் கிடைக்கும் காலத்தில் அக் குழந்தை அதனை நிறைவேற்றப் பார்க்கும்.

எனவே இனிவரும் காலங்களில் குழந்தைகளுக்கான பொருட்களை வாங்குகையில் கவனமாக இருப்போம். அவர்கள் பயன்படுத்தும் பொருட்களிலும் அன்பும் மென்மையும் வழியட்டும். அவை அவர்களது எதிர்காலத்தை அமைதியால் நிரப்பும். நிரப்புவோம் !

குளிர்பானங்கள் ஜாக்கிரதை

 அலுப்பும் தாகமும் தீர போத்தல்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களை வாங்கி அருந்துபவரா நீங்கள் ? ஒரு நிமிடம் போலி PEPSI குளிர்பானம் எப்படித் தயாரிக்கப்படுகிறதெனக் கீழுள்ள படங்களைப் பாருங்கள். 


PEPSI தயாரிக்கத் தேவையான இரசாயனக் கலவையோடு, அவற்றுக்குத் தேவையான அத்தனையையும் கடையினில் வாங்கலாம்.
 பாவனைக்குட்படுத்தப்பட்ட பழைய போத்தல்கள் மீள் பாவனைக்காகக் கழுவப்படுகின்றன.
இரசாயனக் கலவை மூலம் தயாரிக்கப்பட்ட போலி PEPSI பானம் போத்தல்களில் நிரப்பப்படுகின்றன.
 காற்றுக்குமிழிகள் அடைபட்டுள்ளனவா எனவும் பானத்தின் அளவும் சரிபார்க்கப்படுகிறது.

PEPSI போத்தலுக்குள் GAS நிரப்பப்படுகிறது.


 போத்தலுக்குப் பொருத்தமான மூடி தேடியெடுத்து...

இறுக மூடினால்...


போலி  PEPSI பானம் தயார்.


சிறு சிறு நகரங்களில் இப்படியாகத்தான் பல பிரபலமான, தரமான பொருட்களின் போலித் தயாரிப்புக்களும் உலவுகின்றன. அடுத்த முறை ஒரு பொருளைப் பாவனைக்கு எடுக்கமுன்னர் நன்கு பரிசோதித்து வாங்குங்கள்.
எவ்வாறிருப்பினும், வீட்டில் சுகாதாரமான முறையில் உணவுப்பொருட்களே உடல்நலத்திற்குச் சிறந்தது.

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பதப்படுத்திய கோழிகளைத் தவிருங்கள் !

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இறைச்சி வகைகளை வாங்கிச் சமைத்து அல்லது வெளிநாட்டு உணவுவிடுதிகளில் விரும்பி உண்பவரா நீங்கள் ?
உங்களுக்காகத்தான் இந்தப்பதிவு.


நாடு முழுவதற்குமான உணவுத்தேவையைப் பூர்த்தி செய்யவெனவும் வெளிநாட்டு உணவு விடுதிகளுக்காகவும் தற்பொழுது அனேகமான உணவுப்பொருட்கள் வேற்று நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இறைச்சி வகைகளும் அவற்றுள் அடங்கும்.


பெரும்பாலாக எல்லா நாடுகளும் சீன உணவு விடுதிகளைக் கொண்டிருப்பதனால் பல வகையான இறைச்சிகள் சீனா தேசத்திலிருந்தும் இறக்குமதி செய்யப்படுகின்றன.

அவ்வாறாக இறக்குமதி செய்யப்படும் நல்ல கோழி இறைச்சி வகைகளுக்குள் தரமற்ற கோழி இறைச்சிகளும் கலக்கப்பட்டு அனுப்பப்படுகின்றன எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இனிக் கீழுள்ள படங்களைப் பாருங்கள்.


அதிகாலையோடு தாமாக இறந்த மற்றும் பறவைக் காய்ச்சலால் இறந்த கோழிகளை வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் செல்கிறார் இவர்.
Visit Us @ www.MumbaiHangOut.Org
வீடு வீடாகப் போய் இறந்த கோழிகளிருக்கிறதா என விசாரிக்கிறார்

Visit Us @ www.MumbaiHangOut.Org
இது போலப் பலர் இறந்த கோழிகளைத் தேடி நகரங்கள் தோறும், கிராமங்கள் தோறும் உலாவருகின்றனர்.
Visit Us @ www.MumbaiHangOut.Org
ஒரு இறந்த கோழியை 1 RMB கொடுத்து வாங்கும் இவர்களால் அதனை முழுதுமாகத் தயார்படுத்திய பின்னால் 9 RMB க்கு விற்க முடிகிறது.

Visit Us @ www.MumbaiHangOut.Org
இறந்த கோழிகளின் சேமிப்பகம்

Visit Us @ www.MumbaiHangOut.Org
இறந்த கோழிகளின் சிறகுகளும், அழுக்குகளும் அகற்றப்பட்டு சுத்திகரிக்கப்படுகின்றன.

Visit Us @ www.MumbaiHangOut.Org
புதிய கோழி இறைச்சிகளாகக் காட்ட சுத்திகரிக்கப்பட்ட கோழிகள் வண்ணக் கலவைக்குள் அமிழ்த்தப்படுகின்றன

Visit Us @ www.MumbaiHangOut.Org
நிறமூட்டப்பட்டு புதிய கோழி இறைச்சிகளாகத் தோற்றமளிக்கின்றன

Visit Us @ www.MumbaiHangOut.Org
இவ்வாறாகப் பொதி செய்யப்பட்ட இறைச்சிகள் கடைகளிலும் உணவு விடுதிகளிலும் மிக அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பொழுது வாங்கி உண்கிறோம். பழைய, கெட்டுப்போன இறைச்சிகளைப் பாவனைக்கு எடுக்கும் பொழுது அதனோடு நோயையும் விலைக்கு வாங்குகிறோம். இனி அவற்றின் மூலங்களைப் பற்றியும் சிந்திப்போம்.


குருதிக் கடலில் குளிக்கும் வீரர்கள், மிதக்கும் அப்பாவி ஜீவன்கள்

டென்மார்க் - உலகின் அழகிய நாடுகளில் ஒன்று

டொல்பின் மீன்கள் - மனிதனுடன் மிகவும் நெருங்கிப் பழகும் மீனினங்களில் ஒரு வகை. அழகானவை. அன்பானவை. எவர்க்கும் எத்தீங்கும் செய்யாமல் வாழக்கூடிய மீன்கள் இவை.

இப்படங்கள் - டென்மார்க்கின் 'ஃபாரோ' தீவுகளில் வழமையாக நடைபெறும் ஒரு கொடூரத்தின் சான்று. சமுத்திர நீரைச் சிவப்பாக்கி இவை கூட்டம் கூட்டமாக வேட்டையாடப்படுவது உணவுக்காகவா என்றால் அதுவுமில்லை. ஆண்கள் தங்கள் வீரத்தை நிரூபிக்க ஆதிதொட்டு நடைமுறையிலிருந்து வழக்கம் என்கிறார்கள். அப்பாவி ஜீவன்களிடத்தில் தங்கள் வக்கிரத்தனத்தை வெளிப்படுத்தும் இவர்களிடம் வீரமெங்கே இருக்கிறது?



எப்படி இதைத் தடுக்கப் போகிறோம் நண்பர்களே ?

மாமரத்தின் மேலொரு வீடு

'மரங்களைப் பாதுகாப்போம்' எனக் கோஷம் போடும் பலர் கூடத் தனக்கெனத் தேவைகள் ஏற்படுமிடத்து மரங்களை வெட்டத் தயங்க மாட்டார்கள். கீழே உள்ள படங்களைப் பாருங்கள். சிறு வயது முதல் தான் பார்த்து வளர்ந்த மாமரத்தின் மேலுள்ள அதீத பாசத்தால் தனக்கு வீடுகட்ட நேர்ந்தவிடத்து அம்மரத்தைத் தரிக்காமல் அதன் மேலேயே வீட்டையும் கட்டி, வாழ்ந்து வருகிறார் திரு.கே.பி.சிங்.


திரு. கே.பி.சிங்கும் அவரது குடும்பமும் இந்தியா, ராஜஸ்தானில் உள்ள உதய்பூர் எனும் இடத்திலுள்ள இவ்வீட்டில் 2000 ஆம் ஆண்டிலிருந்து வசித்துவருகிறார்கள். ஒரு கட்டிட நிர்மாணத்துறை பொறியியலாளரான இவர் தன்னை முன்னுதாரணமாக்கி மரங்களைப் பாதுகாப்பதற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குழந்தை வதை - ஏன் இன்னும் தடுக்கப்படவில்லை ?

சிறு மொட்டுக்களின் மென்னிதழ்களில் தீ வைப்பதைப் பார்த்து மனம் பொசுங்குபவரா நீங்கள் ? உயிரோடு இளம் பிஞ்சுகளின் தோலுரிப்பதைப் பார்த்து விழிகள் கசியுமா உங்களது ?

இந்தப் படங்களைப் பார்த்தபொழுதில் நான் அப்படித்தான் உணர்ந்தேன். மிகுந்த கவலையைத் தோற்றுவித்தன இவை.


இப்படங்கள் சீனாவின் ஒரு ஜிம்னாஸ்டிக் கலைப் பயிற்சிக் கூடத்தில் எடுக்கப்பட்டவை. அருகி வரும் கலையை வளர்ப்பதாகச் சொல்லி எல்லாக் குழந்தைகளுக்கும் ஜிம்னாஸ்டிக் கலை கட்டாயப்பாடமாக்கப்பட்டுள்ளது.

இப்பயிற்சியின் போது வரும் சுகவீனங்களுக்கும், அங்கவீனங்களுக்கும் பயிற்றுவிப்பவர்கள் பொறுப்பல்ல எனப் பெற்றோரிடம் கையெழுத்து வாங்கியபின்னரே இப்பயிற்றுவிப்புக்கள் தொடர்கின்றன.

எனினும் இக் கலை ஏதுமறியாக் குழந்தைப் பருவத்தை நோகவைத்துச் செதுக்கப்படுவதுதானே ? இக் குழந்தைகளுக்கும், குழந்தைத் தொழிலாளர்களுக்கும் என்ன வித்தியாசம்? குழந்தைகளை வதைக்கும் இக்கலை மட்டும் ஏன் இன்னும் உலகில் தடுக்கப்படவில்லை ?